“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் - திருத்தொண்டத் தொகை".
பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். மாறனார் என்ற பெயர் கொண்டவர். செல்லம் படைத்தவர். மிகுந்த நிலங்கள் உடையவராய்விளங்கினார். அடியார் யாராக இருப்பினும், எத்தனை பேர் வந்தாலும் ஈரமுள்ள இனிய மென்சொல் கூறி வரவேற்று உபசரித்து உயர்ந்த உணவு தந்து உவகை யுறுவார்.
"கொண்டுவந்து மனைப்புகுந்து குலாவுபாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்திடை வைத்தருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்திலாறு சுவைத்திறத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுதுசெய்ய அளித்துளார்."
செல்வம் நிறைந்துள்ள போது அன்னதானம் புரிவது இயல்பு; எளிதங் கூட. வறுமையால் வாடும் போதும் இவர் அன்ன தானம் புரிவதில் வல்லவர் என உலகினர்க்கு அறிவிக்கவேண்டி, இறைவர் அவருடைய செல்வம் மறையுமாறு திருவுளஞ் செய்தார். மாறனாரின் செல்வங்கள் யாவும் சிறுகச்சிறுக மறைந்தன. வறுமைப்பதம் எய்தினார்.
அன்னமும் ஏனமும் அறியாத அரனார், அடியாராக எழுந்தருளி வந்தார். வந்த நேரம் நடு இரவு.
சில நாள்களாகவே உணவு இன்றி நாயனார் பசியால் களைத்து கதவு அடைத்து மழையுங் குளிரும் வாட்ட, வீட்டுக்குள் ஒடுங்கியிருந்தார்.
அருந்தவரை அன்புடன் வரவேற்றார். திருமேனியின் ஈரத்தை மாற்றினார். அவரை இருக்கச் செய்து, உள்ளே சென்று, "மாதரசே!
நமக்கு உணவில்லை யென்றாலும், அரனார் அடியார்க்கு அமுது செய்விக்க என்ன வழி?" என்று கேட்டார்.
அம்மையார். 'பெருமானே! நடு இரவு இனி நமக்குக் கடன் தருவாகும் இல்லை. இன்று வயலில் பகலில் விதைத்த முளைகளை வாரி வந்தால் ஒருவாறு சமைத்து அடியவரைப் பசியாறச் செய்யலாம்" என்றார்.
நாயனார் தலையில் பெரிய மிடாவைக் கவிழ்த்துக் கொண்டு கொட்டுகின்ற மழையில், காலால் வழி தடவிக் கொண்டு மெல்ல கரிய இருளில் வயலுக்குச் சென்று, நீரில் ஒரு புறம் ஒதுங்கியுள்ள நெல்முனைகளை வாரிக் கொண்டு வந்து தந்தார். விறகில்லை யென்றார். மனைவியார். வீட்டின் பின்புறம் உள்ள பகுதியையறுத்துத் தந்தார். விறகினை மூட்டி முளையை வறுத்து அரிசியாக்கி அன்னமாகச் சமைத்தார். கறிக்கு என் செய்வோம் என்றார். தோட்டத்தில் பழிமுதல் பறிப்பார் போல் குழிநிரம்பாத கீரைகளைப் பறித்துக் கொணர்ந்து தந்தார். கறியமுது செய்து இறைவனைத் துயில் உணர்த்த,
அவர் ஜோதியாய் எழுந்து அருள் புரிந்தார். மாறநாயனார் மனைவியுடன், சிவலோகம் சேர்ந்தார். குபேரனும் பணிசெய்யும் பெரும்பேறு பெற்றார்.
இளையான்குடிமாறார் அவதரித்த & முக்தி பெற்ற ஸ்தலம் ராஜேந்திர சோழிஸ்வர கோவிலில்
குரு பூசை
Comments
Post a Comment