அமர்நீதி நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். கோவணக் கள்வராக வந்த சிவபெருமானின் முன்பு துலைத்தட்டில் (தராசில்) தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.
வாழ்க்கைப் புராணம்
சோழவள நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் பிறந்தவர். அடியார்க்குக் கந்தை, கீளுடை, கோவணம் முதலியன கருத்தறிந்து உதவி, செல்வத்தின் பயன் பெற்று வந்தார்.
அருகில் உள்ள திருநல்லூர் என்ற சிவத்தலத்தில் சென்று சிவபெருமானுடைய திருவிழாக்களைச் சேவிப்பார். அங்கு ஒரு திருமடம் புதுக்கி, அங்கேயே தங்கி அறம் பல புரிந்து வந்தார்.
இறையவர் மறையவ பிரமசாரியாக வந்தார். அவர் பிடித்திருந்த தண்டில் இரு கோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பை இவைகள் விளங்கின.
அமர்நீதியார் அவரை அளவற்ற அன்புடன் எதிர்கொண்டு இறைஞ்சி அமுது செய்யுமாறு வேண்டினார். தண்டின் முனையிலிருந்த ஒரு கோவணத்தை அவிழ்த்துக் கொடுத்து, இதைப் பாதுகாவலாக வைத்திரும். நான் நீராடி வருவேன்; ஒருவேளை மழை வந்து கோவணம் நனைந்தால் இது உதவும். இது மிகவுயர்ந்தது" என்று கூறிச் சென்றார்.
சென்ற பரமர் காவிரியில்தான் ஆடினாரோ? அவர் தம் சடையில் உள்ள கங்கையில் தான் ஆடினாரே? நனைந்து வந்தார். தொண்டரின் அன்பு நீரில் நனையுமாறு நினைந்தார். கோவணத்தைக் கேட்டார். அது அங்கு இல்லை. இறைவர் அருளினால் அது மறைந்தது. வேறு ஒரு நல்ல கோவணத்தைக் கொணர்ந்து நீட்டினார். இறைவர், எரி துள்ளியது போல் சீறினார். தண்டின் முனையிலுள்ள மற்றொரு கோவணத்தை வைத்துத் துலையில் நிறுத்து, அதற்கு நிகரான கோவணந்தருவது என்று உடன்படிக்கை
நடந்தது. தன்பால் இருந்த கோவணங்கள், பட்டு, பொன், வெள்ளி முதலிய அனைத்தும் தட்டில் இட்டும் நிறை சரியாகவில்லை.
"இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் யடிமை
பிழைத்தி லோம் எனில் பெருந்துலை நேர்நிற்க என்று
மழைத் தடம் பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்."
அமர்நீதி நாயனார் தம் மனைவியுடனும் மகனுடனும் திரு ஐந்தெழுத்தை ஓதித் துலாத் தட்டில் ஏறினார். துலை சமனாயிற்று. அதுவே விமானமாகியது. அவ்விமானத்தில் குடும்பத்துடன் ஏறி அமர்நீதியார் சிவபுரம் சேர்ந்தார்.
குரு பூசை
அமர்நீதி நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
மேலும் அறிந்துகொள்ள :
- அமர்நீதி நாயனார்
- நாயன்மார்கள்
- குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
Comments
Post a Comment