இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை                           கொங்கு நாட்டுத்தலங்கள் ஏழு. அவற்றுள் ஒன்று கருவூர், அத்தலத்தில் ஆனிலை யென்ற கோயிலில் பசுபதி ஈச்சுரர் எழுந்தருளியிருப்பார். அந்நகரைப் புகழ்ச்சோழர் என்ற ஆற்றல் படைத்த மன்னர் அறநெறி வழுவாமல் ஆட்சிபுரிந்தார்.                     அத் தலத்தில் எறிபத்தர் என்ற சிவனடியார் வாழ்ந்தார். அவர்திருக்கரத்தில் பரசு என்ற படைக்கலம் ஏந்தியவர். அடியார்க்கு எங்காவது தீங்கு நேர்ந்தால் அவர் தமது பரசினால் தீமையைத் தடுத்து நலம் புரிவார்.                     அன்று அஷ்டமி. மறுநாள் மகாநவமி. சிவகாமியாண்டார் என்னும் அடியார் நந்தவனத்தில் மலர் பறித்துப் பூக்கூடையைத் தண்டில் தொங்க விட்டுத் திருக்கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.                     புகழ்ச்சோழருடைய பட்டவர்த...