இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் – திருத்தொண்டத்தொகை
கொங்கு நாட்டுத்தலங்கள் ஏழு. அவற்றுள் ஒன்று கருவூர், அத்தலத்தில் ஆனிலை யென்ற கோயிலில் பசுபதி ஈச்சுரர் எழுந்தருளியிருப்பார். அந்நகரைப் புகழ்ச்சோழர் என்ற ஆற்றல் படைத்த மன்னர் அறநெறி வழுவாமல் ஆட்சிபுரிந்தார்.
அத் தலத்தில் எறிபத்தர் என்ற சிவனடியார் வாழ்ந்தார். அவர்திருக்கரத்தில் பரசு என்ற படைக்கலம் ஏந்தியவர். அடியார்க்கு எங்காவது தீங்கு நேர்ந்தால் அவர் தமது பரசினால் தீமையைத் தடுத்து நலம் புரிவார்.
அன்று அஷ்டமி. மறுநாள் மகாநவமி. சிவகாமியாண்டார் என்னும் அடியார் நந்தவனத்தில் மலர் பறித்துப் பூக்கூடையைத் தண்டில் தொங்க விட்டுத் திருக்கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.
புகழ்ச்சோழருடைய பட்டவர்த்தனம் என்ற யானை மதம் பிடித்து விரைந்தோடி வந்து பூக் கூடையைத் துதிக்கையால் கவர்ந்து கீழே சிந்தியது.
“களியானையின் ஈர் உரியாய் சிவதா!
எளியார். வலியாம் இறைவா சிவதா!
அளியார் அடியார் அறிலே சிவதா!
தெளிவார் அமுதே சிவதா சிவதா!"
என்று சிவகாமியாண்டார் கூறி முறையிட்டார்.
சிங்கம் போல் சீறி எறிபத்தர் அங்கே வந்து யானையையும் பாகர்களையும் கொன்று வீழ்த்தினார்.
ஒருவன் ஓடி சோழமன்னனிடம் "உமது பட்டவர்த்தன யானையை பாகருடன் ஒருவர் கொன்று போட்டார்" என்று கூறினான்
பகைவர்தாம் கொன்றனர் என்று கருதிய பார்த்திபன் நால்வகைச் சேனைகளுடன் வந்தான். மாண்ட யானையின் அருகில் பரசு தாங்கிநின்ற எறிபத்தரைக் கண்டான். அஞ்சினான். அவரைத் தொழுதான். பிழை செய்தாலன்றி தாங்கள் இதனைப்பாகரோடு தண்டித் திருக்கமாட்டீர். தாங்கள் செய்த தண்டனை போதுமோ? அடியேன் ஏதாவது செய்ய வேண்டுமோ? என்றான். "சிவகாமியாண்டார் என்ற இந்த அடியார் சிவாலயத்துக்கு கொண்டு போகும் மலர்க் கூடையைச் சிந்தியதால் யானையையும், யானையை விலக்காமையால் பாகர்களையும் கொன்றேன்" என்றார் எறிபத்தர்.
புகழ்ச் சோழர், "ஐயனே! யானைக்குரிய என்னையுங் கொன்றால்தான் தண்டனை முழுமையாக முற்றுப் பெறும். தேவரீருடைய புனிதமான மழுவினால் இத்தீயேனைக் கொல்லுவது கூடாது. இந்த வாளால் என்னைக் கொல்லும்” என்று தன் வாளை நீட்டினான் எறிபத்தர் மன்னனுடைய அன்பின் திறத்தைக் கண்டு வியந்தார். வா
ளை வாங்கி தன்னையே கொல்ல நினைந்து வாளைக் கழுத்தில் வைத்தார். மன்னன் திடுக்கிட்டு வாளைப் பிடித்து வாளை விலக்கலானார்.
இறைவன் இருவருடைய அன்பின் திறத்திற்கும் இரங்கினார். "அன்புடையீர்! உங்கள் அன்பினை உலகுக்குக்காட்ட இது இறையருளால் நிகழ்ந்தது” என யாவருங்கேட்க ஒரு உரை வானிடை எழுந்தது. யானையும் பாகரும் எழுந்தார்கள், கூடையில் மலர் நிறைந்திருந்தது. எல்லோரும் ஆலயம் சென்று அரனாரை தொழுதார்கள்.
இவ்வாறு எறிபத்தர் அடியார்கட்கு ஆங்காங்கு எய்தும் இடர்களை களைந்துகொண்டு திருத்தொண்டு புரிந்து சிவலோகம் இருந்து சில கணங்ளுக்குத் தலைமையாகும் பதம் பெற்றார்.
குரு பூசை
Comments
Post a Comment