"ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்"  - திருத்தொண்டத் தொகை கூறுகிறது. சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்னும் பதியில்  வேளாண்மையிற் சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமநாயனார். இவர்  சிவபக்தியிலும் சிவ அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார். கலிக்காமனார்  மானக்கஞ்சாறனாரது மகளைத் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருப்பணிகள் புரிந்தார். இங்ஙனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி நாயன்மார் சிவபெருமானை பறவை நாச்சியாரிடம் தூது அனுப்பிய செய்தி கேட்டு, இறைவனை ஏவுபவனும் தொண்டனா?,இது என்ன பாவம்! இப்பெரும் பிழையினைக் கேட்டபின்னரும் இறவாதிருக்கின்றேனே! பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவினால் அவ்வேவலைச் செய்வதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவது போவதாகத் திரிவதோ? நான்முகன் மால் ஆகிய தேவரெல்லாம் தொழும் தேவாதி தேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? என்று கடும் கோபமுற்றார். இதனை கேள்விப்பட்ட சுந்தரமூர்த்தியார் கடும் மனவேதனையுடன் சிவபெருமானை தொழுதார். இவர்களை...